கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அணுசக்திக் கழகம் விளக்கம் அளித்துள்ள நிலையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் கூடங்குளம் அணு மின்நிலையம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சொல்லி வருவதாக குற்றம் சாட்டினார். சைபர் தாக்குதல் நடக்கவில்லை என அணு உலை நிர்வாகம் கூறிய நிலையில், ஒரு கணினியில் மட்டும் தாக்குதல் நடைபெற்றதாக அணுசக்தி கழகம் கூறியது. இதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் உயிர்களுடன் அதிகாரிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இது குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றும் உதயகுமார் வலியுறுத்தினார்.