ஈரோடு மாவட்டத்தில், மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர் உட்பட புதிதாக, 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 460 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஈரோட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது .
கொரோனா - ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். குடியாத்தம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 5 தேதி வரை கொரோனா தொற்று இல்லாத நகராட்சியாக இருந்து வந்தது. ஆனால், ஒரே மாதத்தில் தற்போது, பாதிப்பு எண்ணிக்கை நாநூற்று ஐம்பதை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் கொரோனா புதிய உச்சம் - ஒரே நாளில் 269 பேருக்கு பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில், புதிய உச்சமாக ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தி 766 ஆக அதிகரித்துள்ளது. மேலம், 39 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சிகிச்சை முடிந்துச ஆயிரத்தி 167 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 600- க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டீ மற்றும் பேக்கரி கடைகளை திறக்க அனுமதி" - 6 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கலாம்" - நகராட்சி நிர்வாகம்
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டீ மற்றும் பேக்கரி கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 30 வார்டுகளிலும் நோய் தொற்று அதிகரித்தால், முழு ஊடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடித்து காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - ஆம்புலன்ஸ் வர 7 மணி நேரம் தாமதம் என புகார்
திருமங்கலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களை அழைத்துச் செல்ல 7 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்களை அழைத்து செல்ல நான்கு ஆம்புலன்ஸ் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆவதால், கூடுதல் ஆம்புலன்ஸ் வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு அரசு பேருந்து ஓட்டுனர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தி 820 ஆக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
"4.24 லட்சம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு" - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் குடும்பத்தினர் உட்பட 4 லட்சத்தி 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர், முடிவுகள் வரும் வரை வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தொற்று உறுதி செய்யப்பட்டால், பரிசோதனை மேற்கொண்டவர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, பரிசோதனை மேற்கொண்டவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என 4 லட்சத்தி 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
==
தனிமாவட்டம் கோரி போராட்டம் - வழக்குப்பதிவு
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி அனைத்துக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஊரடங்கால் போராட்டத்தை தொடர காவல்துறை அனுமதி மறுத்ததால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். மேலும் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்துவட்டி காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளிகளிடம் கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமகவினர் புகார் அளித்தனர். கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்னும் வீட்டுமனை பட்டாவை திருப்பி கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுதாகவும், பட்டாக்களை கந்துவட்டி காரர்களிடம் இருந்து மீட்டு தரும்படியும் கோரிக்கை வைத்தனர்.
--------------------------------
லாரி மோதி இளைஞர் உயிரிழந்த சோகம்
சென்னையில் லாரி மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர், மணலி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை, போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கேரளாவுக்கு கடந்த முயன்ற 15 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் வாழையாறு சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் இருந்து கேரளாவுக்கு பனியன் கழிவுகளை ஏற்றிச்சென்ற வாகனத்தில், கடத்தப்பட்ட குட்காவை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உட்கடம் பகுதியை சேர்ந்த ஜெயினுலா புதீன் என்பவரை கைது செய்தனர்.
மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
வேலூரில் மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன கீச்சக்குப்பம் பகுதியில் காட்டுப்பன்றிக்காக போடப்பட்ட மின் வேலியில் சிக்கி மதன் என்பவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மின்வேலி அமைத்த பார்த்திபன் என்பவரை தேடிவருகின்றனர்.
ராமநாதசாமி கோவில் ஆடி திருக்கல்யாண திருவிழா - கொடியேற்றத்துடன் துவங்கியது
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் ஆடி திருக்கல்யாண விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. மேள வாத்தியங்கள் முழங்க, நான்கு ரத வீதிகளில் கோவில் யானை மூலம் எடுத்துவரப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான அமாவாசை உற்சவமும் வரும் இருபதாம் தேதியும், திருக்கல்யாண உற்சவம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை...குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி...
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் கனமழை பெய்தது. சாலையில் ஓடிய மழை நீரால், முக்கிய வீதிகளில் சென்ற வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தில் மெதுவாக ஊர்ந்து சென்றன. மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டியில் 6 வது நாளாக கனமழை
நீலகிரி மாவட்டத்தில், ஆறாவது நாளாக கனமழை வெளுத்து வாங்கியது. ஊட்டி, தொட்டபெட்டா அவலாஞ்சி, நடுவட்டம், முதுமலை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் வேளாண் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அடர்த்தியான மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
திருவண்ணாமலையில் இடியுடன் கனமழை
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மாவட்டத்தின் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும், கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஏரி, குளங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கும்பகோணத்தில் கொரோனா அச்சம் - முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிக்கை
கும்பகோணத்தில் இரு தினங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்களின் வீடுகள் அடைக்கப்பட்டு வருவதால், அப்பகுதி வாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, கும்பகோணத்தில் கட்டுப்பாடுகளை அதிகரித்து, 2 வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்தி, கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தாய் - மகனுக்கு கொரோனா தொற்று
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில், அறுபது வயது மூதாட்டி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர் இருவரையும், ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.