மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடந்த 2016 அக்டோபர் முதல் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு முழுமையாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி, நகராட்சிகளுகான தேர்தல் அடுத்த கட்டமாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி நகராட்சி தேர்தல்களை நடத்த தேர்தல் தேதி எதுவும் குறிக்கப்பட்டு உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.