அரசியல் சாசன தினம் மற்றும் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 865 பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக பதிவு செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அரசியல் சாசன தின உறுதிமொழியை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி படிக்க சக நீதிபதிகளும், பார் கவுன்சில் நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் வாசித்தனர்.
இதில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசும்போது, அரசியல்சாசனம் பகவத் கீதையைப் போன்றது, அது பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தரும் என்றார். வழக்கறிஞர் தொழில் ஆரம்பத்தில் போராட்டங்கள் நிறைந்ததாகவும், அதிருப்தி நிறைந்ததாகவும் தான் இருக்கும் என்ற அவர், நல்ல குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றார். சிறந்த முறையில் பணியாற்றினால் உண்மையான திருப்தி கிடைப்பதுடன், புத்தருக்கு கிடைத்தது போன்ற ஞானத்தையும் கூடுதலாக பெறமுடியும் என்றும் ஏ.பி.சாஹி தெரிவித்தார்.