சென்னையில் ரயில் நிலையத்தில் அலறிய பெண்... நொடிப்பொழுதில் உதவிய மக்கள், ரயில்வே போலீஸ் சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞரை, ரயில்வே காவலர் மற்றும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். செங்கல்பட்டைச் சேர்ந்த அபிநயா, உறவினர் வீட்டில் இருந்து திரும்புவதற்காக ரயில் நிலையம் வந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரது 8 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். அபிநயாவின் அலறல் சத்தம் கேட்டு, பணியில் இருந்த ரயில்வே காவலர் குமாரவேல் மற்றும் பொதுமக்கள் இணைந்து இளைஞரை துரத்தி சென்று வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன், வேலை கிடைக்காததால் சாப்பாட்டுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி அபிநயாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.