சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற் சாலையில் ஆண்டுக்கு ஒருமுறை பழைய பயன்படாத பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாக காளிமுத்து என்பவர் இந்த பொருட்களை ஏலம் எடுத்து வருகிறார். இந்தாண்டுக்கான ஏலம் நேற்று விடப்பட்ட நிலையில், ராணுவ விஜிலன்ஸ் பிரிவினர் அளித்த தகவலின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் அதிரடி மேற்கொண்டனர். இதில், 3 லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 25 டன்கள் அதிகமாக பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் அசோக் குமார், தயாளன், அஜித் குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 7 லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்கள் கடத்தியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 3 லாரிகள் மட்டுமே பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய நான்கு லாரிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.