சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் 22 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரவுடி லிங்கன் என்பவருடன் முறையற்ற உறவு இருந்துள்ளது. தன் காதலியை பார்க்க வரும் லிங்கனுக்கு அவரின் மகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தன் நண்பர்களான ஆனந்த் மற்றும் ராஜ்குமாரிடம் சொல்லவே அவர்களும் இதற்கு பக்காவாக பிளான் போட்டுள்ளனர்.கடந்த 12ஆம் தேதி தன் காதலி வீட்டுக்கு சென்ற லிங்கன் மற்றும் அவரது நண்பர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளனர். ஆனால் இதை பார்த்த பெண்ணின் தாய், பதறிக் கொண்டு தடுக்க முயலவே, மற்ற இருவரும் தாயை கத்தி முனையில் மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டார் அந்த இளம்பெண். மகளின் நிலையை பார்த்து பதறிப் போன அந்த தாய், உடனே போலீசில் புகார் அளித்தார். ஆனாலும் இந்த விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மகளிர் அமைப்புகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நியாயம் வேண்டி கண்டன குரல்களும் ஒலித்தன. இந்த சூழலில் தான் மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை கையில் எடுத்தது. நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம், 3 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கியது சென்னை காவல்துறை. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறிய ஆனந்த் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான லிங்கன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.