ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏ.கே.விஸ்வநாதன் 1989-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வானவர்.
*1990 ஆம் ஆண்டு தருமபுரியில் ஏஎஸ்பியாக தன்னுடைய பணியை தொடங்கினார்.
* சட்டம் ஒழுங்கு, சிபிஐ, உளவுப்பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி 2007-ம் ஆண்டு சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றார்.
* பின்னர் 2017 மே மாதம் 13-ம் தேதி சென்னை பெருநகர 104-வது காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.
* தமிழகத்திலேயே சிறந்த காவல் ஆணையராக தமிழக அரசு விருதும் பெற்றார்.
* குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் சென்னை முழுவதும் 'மூன்றாம் கண்' என்ற பெயரில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்களை கணிசமாக குறைய காரணமாக இருந்தார்.
* பெண்கள் பாதுகாப்பிற்கு காவலன் எஸ்ஓஎஸ் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அதை பொதுமக்களிடம் அதிக அளவில் கொண்டு சென்றார்.
* காணாமல் போன செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரியப்படுத்தும் வகையில் டிஜிகாப் என்கிற மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தினார்.
* மத்திய அரசால் வழங்கப்படும் ஸ்காச் விருது சிசிடிவி கேமரா திட்டத்திற்கும், சென்னை போக்குவரத்து காவல் துறையில் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காகவும் வழங்கப்பட்டது.
* சிறப்பாக செயலாற்றிய காவலர்கள் மற்றும் பொதுமக்களை தினந்தோறும் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சன்மானம் வழங்கி வந்ததும் ஏ.கே.விஸ்வநாதனின் சாதனையாக பார்க்கப்படுகிறது.
* காவல்துறை - பொது மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் முன்னுதாரணமாக செயல்பட்டவர் விஸ்வநாதன்.
* சேத்துப்பட்டு பகுதியில் காவலர்கள் தாக்கியதால் காயமடைந்த கல்லூரி மாணவனை வீட்டிற்கே சென்று பார்த்து ஆறுதல் கூறினார் விஸ்வநாதன். இதேபோல் பள்ளிக்கரணை ஐ.டி. பெண் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார்.
* காவல் நிலையங்களை சீரமைத்தல் பணியும் பெரிய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்று இருக்கிறது.
* குறிப்பாக பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள் காவல் நிலையங்களில் தேங்கி கிடப்பதை தடுக்கும் வகையில் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு அதை திறம்பட செயல்படுத்தினார் விஸ்வநாதன். இதற்காகவும் மத்திய அரசின் ஸ்காச் விருது கிடைத்தது.
* மாமல்லபுரத்தில் சீன - இந்திய பிரதமர் சந்திப்பின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை திறம்பட கையாண்டவர். சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை என முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார்.
* கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து சென்றார். இதனால் மக்கள் நடமாட்டம் பெரிதும் குறைந்தது.
* கொரோனா தடுப்பு பணிகளில் இருந்த காவலர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்த ஐஐடி வளாகத்தை தேர்வு செய்து அங்கு அவர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுத்தார்.
* சென்னை காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த விஸ்வநாதன், தற்போது செயலாக்கப் பிரிவுக்கு பணி மாறுதல் பெற்றுள்ளார்.