தமிழக பாஜக சார்பில் நாளை முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை வேல் யாத்திரை பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூர் வரை இந்த பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என உத்தரவிட்டனர். மேலும், யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும், அரசு உத்தரவு பிறப்பித்தால் அதனை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து, தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்திருப்பதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.