தமிழ்நாடு

எரிவாயு நேரடி மானியம் - மாற்றமா? | தந்தி குழுமம் நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது தொடர்பாக தந்தி குழுமம் பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடே தயாராகி வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் தமிழகத்திற்கு பயனளித்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள, தந்தி டி.வி., தினத்தந்தி நாளிதழ், மாலைமலர் மற்றும் DT next இணைந்து மாபெரும் கருத்துக் கணிப்பு நடத்தியது.

மத்திய அரசின் முதல் முன்னெடுப்புகளில் ஒன்றாக இருந்தது, சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் PAHAL திட்டம். காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இதற்கான பரிசோதனை நடந்தாலும், பா.ஜ.க ஆட்சியில் தான் இந்த திட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. திட்டம் அமலுக்கு வந்த 1.1.2015 அன்று, மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலை 705 ரூபாயாக இருந்தது. மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை 405 ரூபாய்.

நவம்பர் 2018ல், சிலிண்டரின் மார்க்கெட் விலை 960 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. அப்போது மானிய விலை 495 ரூபாயானது. 2019ல் மார்க்கெட் விலை குறைந்து, மீண்டும் 705 ரூபாயாக உள்ளது. ஆனால் மக்கள் கொடுக்கும் மானிய விலை ரூ. 483 என்ற அளவில் தொடர்கிறது. அதாவது 4 ஆண்டுகளில் கேஸ் விலை சுமார் 80 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது பற்றி, தமிழகம் முழுவதும் 3,428 பேரிடம் தந்தி டி.வி, தினத்தந்தி நாளிதழ், மாலைமலர், மற்றும் DT next நிருபர்கள் தமிழகம் முழுவதும் கருத்து கேட்டனர். 32 மாவட்டங்களில் கிராமம் முதல் மாநகரம் வரை ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரின் கருத்தும் கேட்கப்பட்டது.

எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது உடனடியாக கிடைக்கிறதா? என்ற கேள்விக்கு, கிடைக்கிறது என்று 72% பேரும், தாமதமாகிறது என்று 28% பேரும் தெரிவித்தனர். சமையல் எரிவாயு மானியம் உங்கள் வங்கி கணக்கில் தவறாமல் செலுத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு, 79% மக்கள் செலுத்தப்படுகிறது என்றும், 21% மக்கள் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர்.

2014க்கு பிறகு, சமையல் எரிவாயு விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, 7% மக்கள் ஆம் என்றும், 79% மக்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 14% மக்கள் சிலிண்டர் விலை ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளனர்.

சமையல் எரிவாயு மானியத்தை வங்கி கணக்கில் செலுத்துவதை வரவேற்கிறீர்களா? என்ற கேள்விக்கு, 64% மக்கள் ஆம் என்றும், 36% மக்கள் இல்லை என்றும் பதிலளித்தனர். இந்த கேள்விக்கு ஆம் என்று பதிலளித்தவர்களில் 61.5% ஆண்கள். 38.5% மட்டுமே பெண்கள். இதன் மூலம், மானிய தொகையை வங்கியில் செலுத்துவதை காட்டிலும், நேரடியாக பொருள் விலையை குறைப்பதே பெண்களின் தேர்வாக இருப்பது தெரியவருகிறது.

இன்னொரு பக்கம் மானிய தொகை வங்கி கணக்கில் செலுத்துவதை ஆண்கள் வரவேற்பதற்குக் காரணம் பெரும்பாலான வங்கிக் கணக்குகள் இவர்களால் கையாளப்படுகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு பற்றிய இன்னும் விரிவான சுவாரஸ்யமான தகவல்கள் கள நிலவரங்களுடன் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் ஒரு விரல் புரட்சியில் இடம் பெற உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி