#chennailatestnews #chicken #birdsflu கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதித்த கோழிப் பண்ணையில் இருந்து, நள்ளிரவில் கோழிகளை ஏற்றிச் செல்ல முயன்ற 3 லாரிகளை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் கட்டியாங்குப்பம் பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சித்திரைப்பேட்டை பகுதியில் அழிக்க முடிவு செய்யப்பட்டிருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை, பண்ணை உரிமையாளர் 5 லாரிகளில் சென்னைக்கு எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கடலூர் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் 3 லாரிகளைப் பறிமுதல் செய்தனர். மற்ற 2 லாரிகளையும் ஓட்டுநர்கள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, லாரியில் இருந்த கோழிகளை அழிக்க உத்தரவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.