ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது சித்திரங்குடி கிராமம்.
10 ஆண்டுகளுக்கு முன் வரை வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பறவைகள் சித்திரங்குடி கிராம கண்மாய் மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து தங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் , சித்திரங்குடி கிராமம் பறவைகளின் கீச்சுக்குரல்களால் நிரம்பி இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மழை சரிவர இல்லாததாலும் இந்த கண்மாய்க்கு குண்டாறு மூலம் வர வேண்டிய வரத்துக் கால்வாய்கள் தூர்ந்து போனதாலும் சித்திரங்குடி கிராம கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது.
இதனால் பறவைகள் எதுவும் வருவதில்லை, பழக்கப்பட்ட பறவைகள் வந்தாலும் கண்மாயில் நீர் இல்லாததால் உடனே திரும்பி விடுகின்றன. வனத்துறை அலுவலகம் இருந்தாலும் பறவைகள் இல்லாததால் அதுவும் பூட்டியே காணப்படுகிறது .. அங்குள்ள சுவர் ஒவியங்களில் மட்டுமே பறவைகளை காண முடிகிறது. பறவைகளை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வெறும் மரங்களை மட்டும் பார்த்து செல்வது வாடிக்கையாகி விட்டது.
கண்மாயில் நீர்நிரப்பி, முன்னர் போல் பறவைகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.