தமிழ்நாடு

பாலாற்றில் 29 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திரா : மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா ?

பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள 29 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்திக் கட்ட, அம்மாநில அரசு ரூ.42 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக -ஆந்திர எல்லை பகுதியில் பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகளால் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக நின்றுள்ளது. கர்நாடகா மாநிலம், நந்திதுர்கா என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு கர்நாடகாவில் 60 கிமீ தொலைவும், ஆந்திராவில் 30 கிமீ தொலைவும், தமிழகத்தில் 140 கிமீ தொலைவும் பயணிக்கின்றது. 3 மாநில மக்களும் பயன்பெற்று வந்த , பாலாற்று நீரை கடந்த 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட சென்னை ராஜதானி - மைசூர் இடையேயான ஒப்பந்தத்தை மீறி கர்நாடகா அரசு சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் கோலார் மாவட்டம் பேத்தமங்கலம் என்ற இடத்தில் அணை கட்டி நீரை தடுத்தது. மேலும், ராம்சாகர், பொக்கசமுத்திரம், விஷ்ணுசாகர் என கர்நாடகாவில் 40 கிமீ தொலைவுக்குள் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏரிகளை கட்டி நீரை தேக்கி வைத்துள்ளனர்.

ஆந்திராவில் பாலாறு பயணிக்கும் 30 கிமீ தொலைவுக்குள் 29 தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு தொடங்கி கட்டி முடிக்கப்பட்ட அணைகளில், மீண்டும் 2014 ஆம் ஆண்டில் இருந்து 8 தடுப்பணைகளின் உயரத்தை 12 அடியில் இருந்து 30 அடியாக உயர்த்தியது. கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகள் பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி நீரைத் தேக்கியதன் விளைவாக தமிழகத்துக்கு பாலாற்று நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக வட மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளும், பாலாற்றுப் படுகைகளும் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. பாலாற்று படுகையில் சுமார் 30 அடியில் கிடைத்த நிலத்தடி நீரும் தற்போது ஆயிரத்து 500 அடிக்குக் கழே சென்றுள்ளது.

பாலாற்று நீரை கர்நாடக மாநிலம் முழுவதுமாக தேக்கியபோதும், ஆந்திர வனப்பகுதிகளில் பெய்யும் மழை பாலாறு வழியாக தமிழகத்துக்கு கிடைத்ததையும் ஆந்திரா தடுக்கிறது. அதன் காரணமாக, தமிழக - ஆந்திர எல்லையான வாணியம்பாடிக்கு கூட பாலாற்று தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 21 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தி கட்டுவதற்காக 42 கோடிரூபாய் நிதி ஒதுக்கி ஆந்திர அரசு அறிவித்துள்ளதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால் பாலாற்றில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்பணைகள் கட்டும் பணியினை தற்போது தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு