போலி சான்றிதழ்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே போலி இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்கள் தயாரித்து, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவில் பதாகை கண்ணடபாளையத்தில் உள்ள 1 புள்ளி 65 ஏக்கர் நிலத்தை, கண்ணம்மாள் என்பவரிடம் இருந்து மனுதாரர் திருவாசுவின் மூதாதையரான மாளப்ப சௌத்திரி என்பவர் கிரையம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நிலத்தை மீண்டும் அபகரிக்க, கண்ணம்மாள் மற்றும் அவரது வாரிசான அன்னம்மாள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, 1976ஆம் ஆண்டு அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, சான்றிதழ்கள் பெறப்பட்டதுபோல் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி அன்னம்மாளின் வாரிசுகளான முனுசாமி மற்றும் கண்ணம்மாள் ஆகியோர், அரசு முத்திரையையும் போலியாகப் பயன்படுத்தி, நிலத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து திருவாசு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆவடி நிலப்பிரச்சினை விசாரணைப் பிரிவு போலீசார், லட்சுமி, ஜானகிராமன், ஜெயக்குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.