இலங்கை தம்புள்ளையில் நடைபெற்ற ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், நடுவர்களின் சர்ச்சைக்குரிய தீர்ப்புகள், வீரர்களுக்கு இடையேயான மைதான மோதல் எனப் பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே, இந்திய ஏ அணியைச் சூப்பர் ஓவரில் வீழ்த்தி இலங்கை ஏ அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் ஆடிய இந்திய ஏ அணி 265 ரன்கள் எடுத்தது. 266 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இலங்கை ஏ அணி, கடைசி பந்தில் சர்ச்சைக்குரிய ரன் ஒன்றை ஓடி ஆட்டத்தை ட்ரா செய்தது.
பேட்டர் பந்தை அடிக்க முயலாததால் அந்த ரன் செல்லாது என இந்திய கேப்டன் திலக் வர்மா நடுவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து , சூப்பர் ஓவரிலும் சர்ச்சை தொடர்ந்தது. நடுவர் வழங்கிய ஒரு ‘வைடு' இந்திய அணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் இலங்கை பேட்டர் அவுட் என நினைத்து இந்திய வீரர்கள் கொண்டாடிய நிலையில், நடுவர்கள் அதை ‘நோ-பால்' என அறிவித்ததால் வீரர்கள் சற்று விரக்தி அடைந்தனர்.
இறுதியில், இலங்கை நிர்ணயித்த 19 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய ஏ அணியைக் குஹதாஸ் மதுலன் தனது யார்க்கர்களால் கட்டுப்படுத்த, இலங்கை ஏ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இலங்கை வீரர்கள் வெற்றியைத் தீவிரமாகக் கொண்டாடிய போது, தோல்வியின் ஏமாற்றத்தில் இருந்த இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர் விஹான் ஹலம்பகேயுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை ஆக்ரோஷமாகத் தள்ளிவிட்டார்.
சக இந்திய வீரர் சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் இலங்கை மூத்த வீரர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் பிரித்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், சிறிது நேரத்திற்குப் பின் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிச் சுமுகமாக மைதானத்தை விட்டு வெளியேறினர்.