கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றுள்ள நிலையில், அவரிடம் 2 நாட்களுக்கு விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் விஜயிடம் இருமுறையும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், மீண்டும் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ள விஜய், சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்த விசாரணைக்குப் பிறகு சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஒருபுறம் தேர்தல் கூட்டணி தொடர்பான யூகங்களும் பேசப்பட்டு வரும் சூழலில், விஜய்யின் இந்த டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.