"மு.க.ஸ்டாலின் நிதானமாக அரசியல் செய்யணும்" - கணபதி சிவக்குமார்
#mkstalin #sivakumar #congress #thanthitv
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நிதானமாக அரசியல் செய்ய வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்று, முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றபோது, ஆறு மாதங்கள் வரை புதிய அரசை விமர்சிக்க மாட்டோம் என மு.க.ஸ்டாலின் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அடுத்த நாளிலிருந்தே சம்பந்தமில்லாத விமர்சனங்களை முன்வைப்பதாகவும், சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் எனக் கூறிய திமுக, தற்போது எதிர்க்கட்சியாக அல்லாமல் எதிரிக்கட்சியாகச் செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், மின்சாரத் துறை விவகாரத்தில் அமைச்சர் விளக்கமளித்த பின்னரும், ஆதாரமின்றி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறியுள்ள அவர், மின்வெட்டுப் பிரச்சினையால் 2011-ல் திமுக ஆட்சியை மக்கள் அகற்றியதை மறந்துவிட்டீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக, மக்களின் நம்பிக்கையைக் குழப்ப முயன்றால் மின்சாரம் தாக்கியதுபோல் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கும் வகையில், “கரன்ட் மீது கை வைக்காதீர்கள் ஸ்டாலின் சார்“ என்று கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.