கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் - பாதியிலேயே பேச்சுவார்த்தையை முடித்து கிளம்பிய அமைச்சர் ரமேஷ் #ministeramesh #farmersprotest பயிர்க்கடன் தள்ளுபடிக்கு 20 நாட்கள் அவகாசம் கேட்ட அமைச்சர் ரமேஷின் பேச்சுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால், பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்திற்கு சென்ற அமைச்சர்கள் வினோத், ரமேஷ், காந்தி ராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், இடைத்தேர்தல் நடைபெறுவதால் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட முடியாது என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். மேலும், 20 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர்கள் பாதியிலேயே பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.