#aadhavarjunadivorce #aadhavarjunadivorce பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்ஸி அறிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரும் லாட்டரி நிறுவன உரிமையாளருமான சாண்டியாகோ மார்ட்டின் என்பவரின் மகள் டெய்சி மார்ட்டின். இவர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஆதவ் அர்ஜூனாவை பிரிவதாக டெய்ஸி அறிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு, புரிதல் மற்றும் பல்வேறு மாற்றங்களுடன் தங்களது வாழ்க்கைப் பயணம் அமைந்ததாக டெய்ஸி தெரிவித்துள்ளார். நண்பர்கள், வாழ்க்கைத் துணைகள், பெற்றோர்கள் என வாழ்க்கையின் வெவ்வேறு அத்தியாயங்களை கடந்து வந்த நிலையில், தற்போது தம்பதியராக பிரிந்து தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், தங்களது குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நலனை உறுதி செய்வதிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்போம் என தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா மீது எப்போதும் மரியாதை இருக்கும் என்றும், அவரது எதிர்காலப் பயணம் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாகவும் டெய்ஸி தெரிவித்துள்ளார். இந்த மாற்றத்தைக் கடந்து செல்லும் தங்களுக்கு, அனைவரும் தனியுரிமை அளித்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.