கடந்த 1833-ல் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக் காலத்திலேயே உருவானது தான் இந்த தாராவி குடிசைப் பகுதி. 2.1 சதுரகிலோ மீட்டரில் அமைந்துள்ள இந்த தாராவியில் 10 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
சோட்டா தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டது இந்த தாராவி. அந்த அளவுக்கு தமிழர்கள் இங்கு அதிகமாக வசித்து வந்தனர். பல மதங்கள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இணைந்து வாழும் இடமாக தாராவி உள்ளது.
மும்பை மாநகரின் ஒரு கோடியே 80 லட்சம் மக்கள் தொகையில் 60 லட்சம் பேர் குடிசைப் பகுதியில் வசித்து வரும் நிலையில், 15 சதவீதம் பேர் தாராவியில் வசித்து வருகின்றனர்.
மும்பை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கூலித் தொழில் புரிபவர்களாக உள்ளனர் இங்கு வாழும் மக்கள்.
இங்கு தோல், ஜவுளி உள்ளிட்ட சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இங்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
தற்போது 3 லட்சம் குடும்பங்கள் இங்கு வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், தாராவி மறு சீரமைப்புத் திட்டம் 22 ஆண்டுகளாக தொடங்கப்படாமலேயே முடங்கி கிடக்கிறது.
கடந்த 1997-ல் ஹாங்காங்காக மாற்றப் போகிறோம் என தொடங்கி இன்று வரை தேர்தலுக்கு முந்தைய வெற்று அறிவிப்புகளாகவே இத்திட்டம் தொடருவதாக தாராவி மக்கள் தெரிவித்துள்ளனர்.
2004-ல் ஐந்தாயிரம் கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் செலவு தற்போது 25 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது. மேலும், காலதாமதம் ஏற்படும் நிலையில் திட்டச் செலவு 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
2000-க்கு முன்பு தாராவியில் குடியேறியவர்கள் மட்டுமேஇந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, 3 கோடி சதுர அடியில் மக்களுக்கு வீடுகள், பூங்காக்கள், பள்ளிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை செய்வதுடன், 4 கோடி சதுர அடிக்கு வணிக வளாகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வதும் திட்டத்தில் உள்ளது. இதற்கு தாராவி வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே திட்டம் முடங்கியதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
மக்களின் நலன்களை மனதில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அரசு வணிக அக்கறையை தவிர்த்து பிரச்சனைக்கு தீர்வுக்காண முன்வந்தால் மட்டுமே தாராவி மறுசீரமைப்பு திட்டம் சாத்தியம் என்கின்றனர் மும்பைவாசிகள்.
மும்பை மக்களின் அன்றாட வாழ்க்கை கலாச்சாரத்தில் சங்கமமாகி போய் உள்ள தாராவியின் மறு உருவாக்கம் ஒட்டு மொத்த மும்பையின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... என்ன செய்யப் போகிறது புதிய அரசு...வழக்கம் போல அறிவிப்புகள் மட்டும் தானா?... செயல்பாடா.... காத்திருக்கும் தாராவி மக்கள்..