Ganapathy Sivakumar | Congress | "ராணிப்பேட்டை காந்தி என்ன அறிவுச்சுடரா?" - கணபதி சிவக்குமார் விமர்சனம்
ராணிப்பேட்டை காந்தி என்ன அறிவுச்சுடரா? – கணபதி சிவக்குமார் விமர்சனம் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 73 லட்சம் பேர் முட்டாள்கள் என்றும், மாநிலத்தின் 34 சதவீத மக்கள் செய்த செயலால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்றும் திமுக முன்னாள் அமைச்சர் காந்தி கூறியுள்ள கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவுக்கும் காந்திக்கும் வாக்களிக்காத மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்பது தான் காந்தியின் கருத்தா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் சொற்ப பணத்திற்கு வாக்களிப்பவர்கள் மட்டும் தான் அறிவாளிகளா என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். கைத்தறித்துறையில் காந்தி செய்த முறைகேடுகள் விரைவில் வழக்குகளாக உருவெடுக்க உள்ளதாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறுநில மன்னர் போல் காந்தி செயல்பட்டதாகவும் கணபதி சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் மக்களை முட்டாள்கள் என்று திட்டுவது விரக்தியின் உச்சமாகும் என்றும் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தில் பூஜ்யம், ஊழலில் நிபுணத்துவம் பெற்றவர் போன்றோரின் இத்தகைய விமர்சனங்கள் மகாத்மா காந்தியின் பெயருக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.