தமிழகத்தில் பல மாநில கட்சிகளின் தாய் கட்சி அல்லது மூல கட்சி என்றால் ஒன்று நீதிக்கட்சி மற்றொன்று காங்கிரசாகும். அரசியல் களத்தில் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் பலர், தனிக்கட்சிகளை அதிரடியாக துவங்கி அப்போது பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனால், இந்த கட்சிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கி போயின. அவற்றுள், ராஜாஜியின் சுதந்திரா காங்கிரஸ், ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கட்சி, ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி, எஸ்.டி.சோமசுந்தரத்தின், நமது கழகம், திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க., நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டவர்கள் துவக்கிய மக்கள் தி.மு.க., வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ், மற்றும் தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக பேரவை, சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி உள்பட இன்னும் பல கட்சிகள் தமிழகத்தில் மிக எதிர்பார்ப்போடு துவக்கப்பட்டு,
பின்னர் காணாமல் போயின. கடைசியாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என கட்சி தொடங்கிய அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அ.தி.மு.கவோடு தனது இயக்கத்தை இணைக்க காத்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி களத்தில் இருந்த 180 கட்சிகளில், தற்போது 141 கட்சிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.