Coimbatore | Congress | NEET Protest | நீட் தேர்வுக்கு எதிராக கோவையில் காங். கட்சியினர் பேரணி
நீட் தேர்வுக்கு எதிராக கோவையில் காங். கட்சியினர் பேரணி நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணியில், வரும் 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் காந்தி மண்டபத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் , நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார் என்று கூறினார். மேலும், மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முயற்சிக்கும், நாடு தழுவிய மாணவர் போராட்டத்திற்கும் வெற்றி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 'கடந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கல்வியில் பாசிசக் கொள்கைகளைப் புகுத்தியதால் அரசு வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது என்றும், நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய எழுச்சிமிக்கப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த மாற்றம் வரும் 2029 பொதுத்தேர்தலில் மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.