அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலாயுதம்பாளையம் கடைவீதி பகுதியில் தொடங்கி தளவாபாளையம், புன்னம்சத்திரம், க.பரமத்தி, தென்னிமலை, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். அடிக்கடி கட்சி மாறும் செந்தில் பாலாஜி ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுபவர் என்று முதலமைச்சர் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திகடவு- அவினாசி திட்டபணிகள் ஆயிரத்து 652 கோடி ரூபாயில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் என்று உறுதியளித்தார்.