மேற்கு வங்க சட்டப்பேரவையின் 2ம் கட்டத் தேர்தல் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் 11 தொகுதிகள் உட்பட மொத்தம் 142 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வன்முறையைத் தவிர்க்கவும், நேர்மையான தேர்தலை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளளது. அதன்படி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2,300-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனிடையே விதிமீறலில் ஈடுபட்ட 5 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.