121 பேரை காவு வாங்கிய உபி கோரத்துக்கு காரணம்... 300 பக்க ரிபோர்ட்டில் அதிர்ச்சி தகவல்
உத்தரப்பிரதேசத்தில் 121 பேர் உயிரிழக்கக் காரணமான ஹாத்ரஸ் சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே பொறுப்பு என சிறப்பு புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது. ஹாத்ரசில், கடந்த 2ம் தேதி சாமியார் போலே பாபா நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 121 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 119 பேரிடம் வாக்குமூலம் பெற்ற சிறப்பு புலனாய்வுக்குழு, 300 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட பொதுமக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், சத்சங்க அமைப்பாளர்களே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை அதிகாரிகள் பார்வையிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.