நாம் சர்வ சாதாரணமாக அடிக்கடி போடும் மாத்திரைகள் இப்படிப்பட்டதா? - கிட்னியே பெயிலியர் ஆகலாம்.. அரசு எச்சரிக்கை
#painkillertablet #painkillersideeffects #antibioticssideeffect
வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இன்றித் தொடர்ந்து பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும் என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) எச்சரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.டி.எஸ்.சி.ஓ (CDSCO) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் 'Schedule H' மற்றும் 'Schedule H1' பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தகுதியான மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளைச் சில்லறை விற்பனை செய்யக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி பொதுமக்கள் சுய மருத்துவம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர மற்றும் அவசியமான சூழல்களில் குறைந்தபட்ச அளவிலான மருந்துகளை மட்டுமே குறுகிய காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை ஒருபோதும் உட்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்த விதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி கேட்டுக்கொண்டுள்ளார். சுய மருத்துவத்தைத் தவிர்ப்பதன் மூலமே சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.