கேரளா மற்றும் மும்பை நகரை புரட்டிப்போட்ட டவ்தே புயல், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், மாகுவா இடையே நள்ளிரவில் கரையை கடந்தது.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அதி தீவிர புயலாக மாறிய டவ்தே புயல், குஜராத்தை நோக்கி நகர தொடங்கியது. முன்னெச்சரிக்கையாக கடலோர பகுதியில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். நேற்று இரவு 10 மணி அளவில் டவ்தே புயல் குஜராத் கடற்கரையை அடைந்தது. இதனால் அப்பகுதியில் சூறாவளி காற்று சுமார் 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. கரையை கடக்க சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்ட டவ்தே புயல், போர்பந்தர், மாகுவா இடையே நள்ளிரவில் கரையை கடந்தது. புயல்காரணமாக பல்வேறுபகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. தொடர்ந்து, அங்கு மீட்பு பணியில் மீட்பு படைகள் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.