"உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்" - மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் செயல்பட்டு வரும் மேக்ஸ் தனியார் மருத்துவமனையின் சார்பில், ஆக்சிஜன் சிலிண்டர் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், ஆயிரத்து 400 கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை மத்திய அரசு உடனடியாக விநியோகம் செய்ய உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு தேவையான ஆக்சிஜன் கலன்களை வழங்கி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேவைப்படும் பட்சத்தில் பெட்ரோலியம், எஃகு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தி, மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.மேலும், மன்றாடி, இரவல் வாங்கியாவது உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என, நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.