Chain Snatching |பைக்கில் வேகமாக வந்து செயின் பறித்த கொள்ளையர்கள்..அடுத்த நொடியே தலைகீழாக மாறிய நிலை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஓய்வு பெற்ற மருத்துவ தம்பதியிடம் சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவில் லைன்ஸ் பகுதியில் வசிக்கும் 69 வயது மருத்துவர் மகேந்திர ஜெயினும், அவரது மனைவி சுசித்ரா ஜெயினும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், சுசித்ராவின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. தப்பிச் செல்ல முயன்றபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததுடன், தம்பதியினரின் பைக்கும் விபத்தில் சிக்கியது. பின்னர் கொள்ளையர்களில் ஒருவர் போலி கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நிலையில், தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்து வந்தனர். அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொருவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.