Rajiv Gandhi | "ராஜீவ் காந்தியின் வரலாற்றை அறிந்து, வளர்ச்சிப் பாதையில் பயணிப்போம்" - காங்கிரஸ் கணபதி சிவக்குமார் அறிக்கை தியாகத் தலைவர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது வரலாறு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இளம் பிரதமராக 40 வயதில் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, நாட்டை 21-ஆம் நூற்றாண்டுக்கு தயார்படுத்தும் நோக்கில் கணினி, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்ததாக நினைவுகூர்ந்துள்ளார். பஞ்சாப், அசாம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்த தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டார். அதேபோல், கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் சென்றடைய, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டது; உலக அமைதி மற்றும் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாகவும் குரல் கொடுத்ததாகத் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியதையும், இந்தியா–இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். ஸ்ரீபெரும்புதூரில் 1991-ஆம் ஆண்டு உயிரிழந்த ராஜீவ் காந்தியின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர் காட்டிய ஜனநாயக மற்றும் வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதே உண்மையான அஞ்சலி என தெரிவித்தார்.