புதுச்சேரி, வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த இறால் ஏற்றுமதி தொழிலாளி குமார். இவரது மகன் ரஞ்சித், பிரெஞ்சு குடியுரிமை பெற்று, தன் மனைவியுடன் பிரான்சில் வசித்து வந்துள்ளார்.
விடுமுறைக்காக கடந்த 9 ஆம் தேதி புதுச்சேரி வந்த அவர், தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். சொத்தை பாகம் பிரித்து தருவதாக, குமார் கூறி வந்தநிலையில், ரஞ்சித் தினந்தோறும் குடித்து விட்டு வந்து தந்தையிடம் தகராறு செய்துவந்துள்ளார்.
இதே போல சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில், பணம் கேட்டு தொந்தரவு செய்த ரஞ்சித், தாயை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்து ஆத்திரமடைந்த குமார், கரப்பான் பூச்சி மருந்தை ரஞ்சித்தின் முகத்தில் அடிக்க, அவர் மயக்கம் அடைந்துள்ளார். கை கால்களை கட்டி போட்டு, இரும்பு கம்பியால் தாக்கி ரஞ்சித்தை கொடூரமாக கொன்றுள்ளார் குமார்...
தொடர்ந்து, அரியாகுப்பம் போலீசில் சரணடைந்தார் குமார். அவரது வாக்குமூலத்தை அடுத்து, ரஞ்சித்தின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சொத்து தகராறில் தந்தையே மகனை கொன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.