இந்த ஏரியில் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இருந்தும், பலவகையான வெளிநாட்டு பறவைகள் அதிகளவு வந்து செல்வதால், இதை தேசிய பறவைகள் சரணாலயமாக அறிவித்து, புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பராமரித்து வருகிறது.
இந்நிலையில் சமீபமாக ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் இனப்பெருக்கம், வெகுவாக குறைந்ததை பறவைகள் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து ஆராய்ந்தபோது, ஏரியில் இயற்கையாக இருந்த பல்வேறு சூழல்கள் மாறியிருந்ததும், ஏரியினை சுற்றி உரிய பாதுகாப்பு இல்லாததால் நாய், நரி போன்ற விலங்குகள் பறவைகள் கூட்டை சேதப்படுத்துவதும் தெரிய வந்தது.
மேலும் தானே புயலுக்கு பிறகு வந்த அடுத்தடுத்த வந்த புயல்களால் ஏரியில் உள்ள மரங்கள் விழுந்து ஏரியில் சூழல் மாறிவர தொடங்கியது.
எனவே இந்த ஏரியை பாதுகாக்க முடிவெடுத்த உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், இந்த ஏரியில் செயற்கை தீவுகளை உருவாக்க முடிவெடுத்து, அதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிக்கு புதுச்சேரி வனத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை 10க்கும் மேற்பட்ட செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ள நிலையில், தொடர்ந்து இங்கு பறவைகளுக்கு ஏற்ற வகையில், அவை இனப்பெருக்கம் செய்ய வசதியான மரங்களை நடவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த செயற்கை தீவுகளால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.