நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை விவசாயிகள் நம்பவேண்டாம் என மத்திய இணையமைச்சர் பக்வந்த் குபா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் பரவலாக உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பக்வந்த் குபா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான உரங்களை விவசாயிகள் சேகரிக்க வேண்டும் என பரவும் வதந்திகளை விவசாயிகள் நம்பவேண்டாம் எனவும் அத்தகைய வதந்திகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்தார். மேலும், டை அமோனியம் பாஸ்பேட் உரங்களை விட காம்ப்ளக்ஸ் உரங்கள் அதிக பயன்தருவதால் விவசாயிகள் இத்தகைய உரங்களை வாங்க மத்திய அரசு பரிந்துரைக்கிறது எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதற்கு தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.