உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில், தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய
பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸ் அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்த லஜர் மசி, ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் தலைவர் ஸ்வர்ன் சிங் ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்ற காவலில் இருந்து தப்பிச் சென்ற லஜர் மசியை பஞ்சாப் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் கெளஷாம்பி மாவட்டத்தில் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் காவல்துறையினரும் உத்தரபிரதேச சிறப்புப் படை காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், லஜர் மசி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், மகா கும்பமேளாவின்போது தாக்குதலில் ஈடுபட லஜர் மசி சதித் திட்டம் தீட்டியதும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.