பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்திரவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சு அடித்தும் கலைத்தனர். அதேசமயம், விவசாயிகள் தலைவரான டல்லேவால் Dallewal கண்ணோரி பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய சூழலில், நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2021-ல் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.