65-வது தேசிய நீச்சல் போட்டிகள், டெல்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் கடந்த 17-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, இந்த போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக மாணவர்கள் 13 தங்கம், 9 வெள்ளி,19 வெண்கலம் என 41 பதக்கங்களை வென்று அசத்தினர். இதன் மூலம் தமிழக அணி, புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது. குறிப்பாக, 19 வயது பிரிவில் 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தமிழக வீரர் மோகித்குமார் தங்கம் வென்று அசத்தினார். அதேபோல, 19 வயது மாணவிகளுக்கான பிரிஸ்டைல் பிரிவு மற்றும் 17 வயது மாணவர் பிரிவிலும் தமிழக மாணவ, மாணவிகள் தங்கம் வென்று சாதித்தனர்.