சென்னையில், பட்டா, சொத்து, வாரிசு, சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் 10 வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அரசின் நலத்திட்டங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள் வழங்கும் சான்றிதழ்கள் மூலமாகவே பெற்று வருகின்றனர். இவர்களை குறிவைத்து போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பல் செயல்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூரை சேர்ந்த ஈஸ்வரி என்பவர் ஜாதி சான்றிதழ் கேட்டு வட்டாட்சியர் ராமனை அணுகியுள்ளார். அதற்கு தேவையான ஆவணங்களை அவர் வட்டாட்சியரிடம் அளித்துள்ளார். அதனை ஆய்வு செய்த போது அது போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
ஈஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மகள் கௌசல்யா என்பவர் நர்சிங் படிப்பு முடித்து விட்டதாகவும், அவருக்கு அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக இந்த ஆவணத்தை கொண்டு வந்ததாகவும் வட்டாட்சியரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த ஆவணம் தயார் செய்து கொடுப்பதற்காக 200 ரூபாயை மர்ம கும்பலுக்கு கொடுத்ததாகவும, அவர் கூறியுள்ளளார். இது தொடர்பாக ஈஸ்வரி மீது செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஒருவருக்கு ஜாமீன் போடுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து மதிப்பு சான்றிதழை வழங்கியுள்ளார். அந்த சான்றிதழ் போலி என கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் இதுபோன்ற புகார்கள் எழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் இதுபோன்ற புகார்கள் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..