வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரவும் தவறான தகவல் காரணமாக பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. தவறான தகவல்களை பரப்புவர்களின் விவரங்களை அளிப்பது தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், தவறான தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் இருப்பிடம் குறித்து அரசுக்கு தெரிவிக்கும்படி கிறிஸ் டேளியலிடம் வலியுறுத்தியதாக கூறினார். அதற்கு, இது தொடர்பாக தங்கள் குழுவினருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக கிறிஸ் டேனியல் தெரிவித்தாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவுக்கு என தனியாக குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க டேனியல் உறுதியளித்ததாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்