மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொங்கன் மற்றும் மும்பை மெட்ரோபொலிடன் பகுதியில், மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் மழை பாதிப்புகளில் சிக்காத வண்ணம், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் தடை ஏற்படாத வகையில், ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தயார்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள அவர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தேவைப்படும் இடங்களில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.