உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் என்ற இடத்தில் 1958ஆம் ஆண்டு பிபின் ராவத் பிறந்தார். இவரது குடும்பத்தின் பல தலைமுறைகள் இந்திய ராணுவத்தில் சேவையாற்றியுள்ளனர். பிபின் ராவத்தின் தந்தை லக்ஷ்மன் சிங் ராவத் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஆக பணியாற்றியுள்ளார்.ஆரம்ப கால படிப்பை சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியில் முடித்த அவர், பாதுகாப்பு சேவை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து, கடக்வஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியில் ராணுவ பயிற்சி பெற்றார் பிபின் ராவத். அத்துடன், வெலிங்டன் ராணுவ சேவை கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல்படிப்பையும் முடித்தார்.ராணுவ ஊடக யுக்திகள் தொடர்பான இவரது ஆராய்ச்சி படிப்புக்காக, மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் பிபின் ராவத்துக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. 1978ஆம் ஆண்டு, இந்தியா இராணுவத்தின் 11-வது கூர்கா ஆயுதப்படையில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.1987ஆம் ஆண்டு, சும்தோரோங் சூ பள்ளத்தாக்கில், பிபின் ராவத் தலைமையிலான படைப்பிரிவு சீன ராணுவத்தை எதிர்கொண்டது. இதேபோல், பல்வேறு களங்களில் பணியாற்றி கைதேர்ந்த அனுபவத்தை பெற்ற பிபின் ராவத், படிப்படியாக ராணுவத்தின் உயர் பதவிகளை பெற்றார்.உத்தம் யுத் சேவா, பரம் விஷிஷ்ட் சேவா, சேனா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பதக்கங்களையும் அவர் பெற்றார். தற்போது, பிபின் ராவத், நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி உயர்வு பெற்று, இந்திய ராணுவ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.