முதல் நாள் காதுகுத்து.. மறுநாள் கருமாதி.. 6 மாத குழந்தையின் உயிர் குடித்த மயக்கமருந்து..? காவு வாங்கிய அனஸ்தீசியா?
வலி தெரியாம மயக்க ஊசி போடப்பட்ட 6 மாத குழந்தை மருத்துவமனையிலேயே பரிதாபமா உயிரிழந்து போயிருக்கு... அரசு மருத்துவரின் அஜாக்கிரதை தான் இந்த மரணத்திற்கு காரணமா?
கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டம், குண்ட்லுப்பேட்டை அரசு மருத்துவமனை.....
பச்சிளங்குழந்தையை கட்டியணைத்த படி ஒரு கூட்டமே அழுது புலம்பிக்கொண்டிருந்தது....
உறவினர்கள் போலீசாரிடம் ஆதங்க வார்த்தைகளை வீசிக்கொண்டிருந்தனர்....
அழுகை... ஒப்பாரி.... ஆதங்கம்... என அந்த மருத்துவமனையே, போராட்டக்களமாக மாறி இருந்தது....
பத்து நிமிடத்திற்கு முன் கலகலவென சிரித்துக்கொண்டிருந்த குழந்தை, இறந்துவிட்டதென்றால் யாரால் தாங்கிக்கொள்ள முடியும்.?
காது குத்திய கையோடு குடும்பத்தின் ஆண் வாரிசை காலனுக்கு காவு கொடுத்துவிட்டு நிற்கிறது இந்தக்கூட்டம்...
அத்தனைக்கும் காரணம் அந்த பச்சிளங்குழந்தைக்கு போடப்பட்ட மயக்க ஊசி...
ஆம்.... சாமராஜ்நகர் மாவட்டம், போம்மலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்- சுபமானசா தம்பதி.... கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குடும்பத்தின் முதல் வாரிசான அந்த குழந்தைக்கு பிரக்யாத் என பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
6 மாதக் குழந்தைக்கு காது குத்துவதற்காக குடும்பமே முடிவு செய்திருக்கிறது. அதன்படி சொந்தபந்தத்தை அழைத்து தடபுடலாக காதணி விழாவை நடத்தி இருக்கிறார்கள். காது குத்தி குழந்தைக்கு தங்க கம்மலும் மாட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் குழந்தை வலியை தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறது. கடைசி வரை அழுகையை நிறுத்தவே இல்லை... இரவு முழுவதும் போராடிப்பார்த்தவர்கள், விடிந்ததும் விடியாததும் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள்.
அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர் நாகராஜ், வலி தெரியாமல் இருக்க குழந்தையின் இரண்டு காதுகளிலும் மயக்க ஊசியை செலுத்தி இருக்கிறார். அதற்கு 200 ரூபாய் கட்டணமும் வசூலித்துள்ளார்.
ஆனால் அடுத்த 10 நிமிடத்தில் குழந்தையின் வாயில் இருந்து நுரை தள்ளி இருக்கிறது. கண்கள் மேலே சொறுகி குழந்தை மயங்கி இருக்கிறது... இதனை கண்டு பதறிய நாகராஜ் குழந்தையை உடனடியாக குண்ட்லுப்பேட்டை தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லி இருக்கிறார்.
அடுத்த கணமே குழந்தையை அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். அங்கே பிரக்யாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே குழந்தை இறந்து விட்டதாக பகீர் கிளப்பி இருக்கிறார்கள்.
இதனை கேட்டு நிலைகுலைந்த ஆனந்தும், சுபமானசாவும் குழந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்காமல் நகரப்போவதில்லை என மருத்துவமனையிலேயே அமர்ந்து அழுது புலம்பி இருக்கிறார்கள். இந்த தகவல் அறிந்த உறவினர்களும் ஊர்க்காரர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே மருத்துவமனைக்கு வந்த போலீசாரும் பெற்றோரிடம் நடந்ததை கேட்டறிந்து குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரித்ததில், மருத்துவர் நாகராஜ், குழந்தையின் வலியை குறைப்பதற்காக அதிக டோஸ் அனஸ்தீசியாவை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மருந்தின் வீரியத்தை பிஞ்சுக்குழந்தை தாங்க முடியாமல் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.