உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், சுமார் 600 கிலோ எடையுள்ள இரும்பு கேட் சரிந்து விழுந்ததில், 50 வயது பாதுகாவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பன்கி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், விக்ரம் சிங் என்ற பாதுகாவலர் காருக்காகக் கேட்டைத் திறந்துவிட்டு மீண்டும் மூட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கேட் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில், அவர் கேட் அடியில் சிக்கி உயிரிழந்தார்.
நள்ளிரவில் நடந்த இந்த விபத்து, மறுநாள் காலை ஐந்து மணியளவில்தான் தெரியவந்தது.
கடந்த பத்து நாட்களாகவே கேட் பழுதடைந்திருந்ததாகவும், புகார் அளித்தும் நிர்வாகம் சீரமைக்கவில்லை என்றும் உயிரிழந்தவரின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.