இன்றைய தலைமுறையினர் அதிக சத்தமான இசைக்குப் பழகிவிட்டதாகவும், இனிமையான மெலடி பாடல்களைக் கேட்காமல் இருப்பது தனக்கு வருத்தமளிப்பதாகவும் பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர் சாம் சிஎஸ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைய இசை போக்கு குறித்து தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார். இன்றைய இளைஞர்கள் அதிக சத்தத்தைக் கேட்டுப் பழகிவிட்டதாகவும், தற்போதைய இசையமைப்பாளர்களும் அந்த அதிக சத்தத்திலிருந்தே இசையை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசையை கேட்டு வளர்ந்த தன்னால், இந்த புதிய பாணியை எளிதில் உள்வாங்க முடியவில்லை என சாம் சிஎஸ் கூறியுள்ளார். மேலும், விருப்பமில்லையென்றாலும் காலத்தின் கட்டாயத்தால் இந்த நவீன இசை போக்கிற்கு தன்னை மெல்ல மெல்ல பழக்கப்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளதாகவும் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார்