நடிகை நயன்தாராவே வாடகை தாய் மூலமாகத்தான் குழந்தை பெற்றுள்ளார் எனக்கூறியும், தனது ஏழ்மையை பயன்படுத்தியும் தன்னை ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாவட்ட வாடகைத்தாய் மருத்துவக் குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது...
இதில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்திருந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அப்போது ஆஜரானவர்தான் திருவொற்றியூரை சேர்ந்த இந்த தமிழரசி.
விண்ணப்பித்திருந்த மனுதாரர்களிடம் வழக்கம்போல் மருத்துவ அதிகாரிகள் விசாரணை செய்ததில், இந்த தமிழரசி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தது அதிகாரிகளை சந்தேகம் கொள்ள செய்தது..
கார்த்திக் என்பவருடன் தனக்கு திருமணம் நடைபெற்றதாக போலியான பத்திரிக்கையை தமிழரசி ஏற்பாடு செய்து சமர்த்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், தமிழரசி தன் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை கண்டுபிடித்த அதிகாரிகள், முதல் கணவரின் பழைய புகைப்படம் மற்றும் பத்திரிகைகளை பயன்படுத்தி விண்ணப்பத்திருப்பதை அறிந்து குழம்பி போயிருக்கின்றனர்...
உடனடியாக, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையை கையிலெடுத்த போலீசார்.. தமிழரசி மற்றும் வாடகைத்தாய் விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த மஞ்சு ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், இவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர்கள், தனியார் கருத்தரிப்பு மையத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவரிடம் உதவி கேட்டிருக்கின்றனர்.
அதற்கு 5 லட்ச ரூபாய் செலவாகும் என்று கூறிய அவர், தம்பதியை இடைத்தரகரான மஞ்சுளா மூலம் தமிழரசியிடம் அழைத்து வந்திருக்கிறார்..
தமிழரசி தன் கணவரை பிரிந்து வாழும் சூழ்நிலையை பயன்படுத்த நினைத்த அப்பெண், நயன்தாரா போன்ற நடிகைகளே வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளதாக கூறி தமிழரசியை மூளைச்சலவை செய்திருக்கிறார்..
கூடவே, தமிழரசியின் ஏழ்மையை பயன்படுத்தி, இது சட்டப்படி தவறில்லை எனவும்.. 5 லட்ச ரூபாய் பணம் கிடைக்கும் எனவும் கூறி அவரை வாடகை தாய்க்கான ஆளாகவும் தேர்வு செய்திருக்கிறார்..
ஒரு கட்டத்தில் இதை ஏற்று, 5 லட்ச ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு தமிழரசியும் சம்மதிக்கவே, தற்போது போலீசில் சிக்கி கதறி வருகிறார்...
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான ஒழுங்கு முறை சட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் கீழ் தான் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற முடியும்.
இதில், தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். மேலும், குழந்தை பெற இயலாததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கூடவே வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும் என்பதோடு, அவர் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன.
இந்நிலையில், வாடகை தாய் விவகாரத்தில் இந்த விதி மீறலும், முறைகேடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விசாரணையை கையிலெடுத்திருக்கும் அதிகாரிகள், தனியார் கருத்தரிப்பு மையத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் நோக்கி விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றனர்...