Gingee | TN Police | செஞ்சி சிறுமி விவகாரம்.. சிக்கிய சாமியார்? அதிர்ச்சி திருப்பம்
#Ginjee #TNPolice #ChildMissing
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள், கிராமத்தில் உள்ள வீடுகளில் சோதனை, செல்போன் எண்கள் மற்றும் செல்போன் கோபுரத்திற்கு வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இந்த விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று காணாமல் போன சிறுமியின் தாய் பவானியிடம் செஞ்சி டி.எஸ்.பி ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். அதிலும் துப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் செல்போன் கோபுர அழைப்புகளை ஆய்வு செய்த தனிப்பிரிவு போலீசாருக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்தது. மாயமான சிறுமியின் வீட்டருகே உள்ள சிவன் கோவிலில் தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் என்ற சாமியார் கடந்த 15 நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு சிறுமி குறித்து விசாரிக்க போலீசார் முயன்றனர். அப்போது அவர் தொடர்பை துண்டித்து போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போன் எண்ணை வைத்து டிரேஸ் செய்தனர். அதில் அவர் முதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. பின்னர் மீண்டும் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். தொடர்ந்து டிரேஸ் செய்ததில் விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சாமியார் சரவணனை மடக்கி பிடித்தனர். அவரையும் அவரது மனைவியையும் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீஸ் வாகனத்தில் வைத்தே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.