சென்னை பெருநகரப் பகுதிகளில் சாலைகளை ஒரே மாதிரியான தரநிலைகளுடன் அமைக்கும் வகையில், புதிய தெரு வடிவமைப்பு வழிகாட்டுதல்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து குழுமம் தயாரித்து வருகிறது. பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாலைகளை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடையற்ற நடைபாதைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான வசதிகள், சாலையோர மரங்களுக்கான இடம், ஒழுங்குபடுத்தப்பட்ட வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, சி.எம்.டி.ஏ உள்ளிட்ட அரசுத் துறைகள், ஒரே மாதிரியான தரநிலைகளைப் பின்பற்றும் வகையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இறுதி வடிவம் பெற்றுள்ள வழிகாட்டுதல்களுக்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.