தற்போதைய செய்திகள்

ஓபிஎஸ் மகன் தீர்ப்பை மாற்றுமா இந்திரா காந்தி தீர்ப்பு? - தேனி தொகுதியில் அடுத்து என்ன நடக்கும்?

தந்தி டிவி

தேனியில் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இனி என்ன நடக்கும் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வருடங்கள் கழித்து இந்த உத்தரவு வந்திருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கிறார் அவருக்கு எதிராக போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன்...

தங்க தமிழ்செல்வன், எதிர்த்து போட்டியிட்டவர்

இப்போது ரவீந்திரநாத் வெற்றி ரத்து செய்யப்பட்டதும் அவர் போட்டியிட்ட தேனி தொகுதி காலியாகுமா...? என்றால் இல்லை... ஆம் அவர் மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.. இப்போது 30 நாட்களில் ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்யவில்லை என்றால், தேனி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கிறார் அரசு வழக்கறிஞர் அருண்...

ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்தால் என்னவாகும் என்ற கேள்விக்கு பல்வேறு வழக்குகளை சுட்டிகாட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

1971 ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் 1975 ஜூனில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக இந்திரா காந்தி உச்சநீதிமன்றம் சென்றார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நிபந்தனைகளுடன் தடையை விதித்த உச்சநீதிமன்றம், இந்திரா காந்தி பிரதமராக தொடரலாம் எனவும் அவரால் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது எனவும் தெரிவித்தது

அதற்கு மறுநாளே இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தார். இதனை தொடர்ந்து இதுபோன்ற பல வழக்குகள் உச்சநீதிமன்றம் சென்ற போது ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது அல்லது நிலுவையில் இருக்கிறது.

சமீபத்தில் கேரளாவில் கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியிட்டதாக தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ ராஜா வெற்றியை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அவர் உச்சநீதிமன்றம் சென்ற போது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு நிபந்தனைகளுடன் ஜூலை வரையில் இடைக்கால தடையை விதித்தது. மேல் முறையீடு தொடர்பாக முடிவை எடுக்கும் வரையில் அவர் எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்றது.

மறுபுறம் 2016 சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிக்கு எதிராக அப்பாவு தொடங்கிய வழக்கு இதுவரையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்