தற்போதைய செய்திகள்

ரயில் மோதி இறந்த தாய்... அடக்கம் செய்த பின்...திடீரென உயிருடன் வந்ததால் - அதிர்ச்சியில் உறைந்த மகன்

தந்தி டிவி

உயிரிழந்ததாக கூறி தாய்க்கு இறுதி சடங்குகளை செய்த மகன், திடீரென தாய் உயிருடன் வீடு திரும்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதான மூதாட்டி சொக்கம்மாள். இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், தனது கடைசி மகனான சரவணனுடன் சேலை கண்டிகை கிராமத்தில் வசித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பாக சொக்கம்மாளுக்கும், எதிர் வீட்டினருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதில், எதிர் தரப்பினர் சொக்கம்மாளை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது...

இதனால், வேதனையிலும், கோபத்திலும் இருந்த மூதாட்டி, சென்னையில் உள்ள மூத்த மகனின் வீட்டிற்கு செல்வதாக கூறி கிராமத்தில் இருந்து கிளம்பியிருக்கிறார்...

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும், புட்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே அடையாளம் தெரியாத படி, மூதாட்டி ஒருவரின் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது...

இந்த தகவல் அறிந்து சென்ற சொக்கம்மாளின் கடைசி மகன் சரவணன், உடலின் அடையாளங்கள் தனது தாயை போல் இருப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார்...

உடனே, சென்னையில் உள்ள தனது அண்ணன்களுக்கு அவர் செல்போனில் அழைக்கவே, அவர்களும் போனை எடுக்காததால் தனது தாயார் தான் என எண்ணி உடலை பெற்ற அவர், அதற்குரிய சடங்குகளையெல்லாம் செய்து அடக்கம் செய்திருக்கிறார்...

சகோதர்களுடன் பல வருடங்கள் பேச்சுவார்த்தையில்லாமல் வாழ்ந்து வந்ததால், அவர்களுக்கு சொல்லாமலும், உடல்கள் சிதறி கிடந்ததால் உறவினர்களுக்கெல்லாம் தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது....

தாய் இறந்த சோகத்தில் இருந்த சரவணன், அதிலிருந்து கொஞ்சம் மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், திடீரென கடந்த 29 ஆம் தேதி அவரது தாயான சொக்கம்மாள் உயிருடன் வீட்டிற்குள் வருவதை பார்த்து திடுக்கிட்டிருக்கிறார்...

உடனே, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி சரவணன் கண்ணீர் விட, கடைசியில் நான் இறந்துவிட்டதாக நீங்கள் அனைவரும் எனக்கு இறுதி சடங்கே செய்துவிட்டேர்களா என சொக்கம்மாளும் கதறி அழ இடமே ரணமானது....

இந்நிலையில், புதைக்கப்பட்ட நபர் யார்? தனது தாய் உயிருடன் தான் இருக்கிறார் என்றால், நாம் அடக்கம் செய்தது யாரை? என குழம்பி போய் போலீசில் புகாரளித்திருக்கிறார் சரவணன்...

உடனே, கடைசி சில மாதங்களில் திருவள்ளூரில் காணாமல் போனவர்களின் லிஸ்டை கையிலெடுத்த போலீசாருக்கு, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புதுநகரை சேர்ந்த சகுந்தலா என்பவர் ரயில் நிலையம் அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது மாயமானது தெரியவந்தது.

இந்நிலையில், சகுந்தலாவின் உறவினர்களை அழைத்து, வட்டாட்சியர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை அதிகாரிகள் தோண்டி எடுத்தனர்...

அப்போது, உடலில் இருந்த மச்சம் மற்றும் பச்சை குத்து முதலிய அடையாளங்களை வைத்து சகுந்தலா தான் என உறவினர்கள் உறுதி செய்த நிலையில், அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி கிளம்பிய சகுந்தலா, ரயில் நிலையம் அருகே உடல் சிதறிய நிலையில் கிடந்தது எப்படி ? தற்கொலை செய்து கொண்டார..? கொலையா அல்லது விபத்தா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

உடல் சிதறி உயிரிழந்த வேறோருவரை, தனது தாய்தான் உயிரிழந்து விட்டார் என எண்ணி, உடலை வாங்கி அடக்கம் செய்த மகன், தாய் உயிருடன் திரும்பியதை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி