உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைவராக உள்ள 66 வயதான டேவிட் மால்பாசின் பதவிக்காலமானது வரும் 2024ம் ஆண்டோடு நிறைவடையும் நிலையில், முன்கூட்டியே பதவி விலகுவதாக அவர் அறிவித்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவராக அஜய் பங்காவை உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் தேர்ந்தெடுத்தனர். தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக அஜய் பங்கா பதவி வகிக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பரிந்துரைப்படி அஜய் பங்கா விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இந்நிலையில், வரும் ஜூன் 2ம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் தலைவராகப் பதவி வகிப்பார்.